Friday, 4 November 2011

சமூகம் வன்முறையை நோக்கி நகர்கிறதா?

(இப்பதிவு முபீன் மௌலவி அவர்களின் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதைக் கவனிக்கவும் )

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் எமதூரில் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான எனது சில கருத்துகளைத் தெரிவிப்பது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எமதூரில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒருவர் தனது இரு பெண் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை ஒத்த மற்றொரு சம்பவம் இதுவாகும். முன்னைய சம்பவத்திலும் கொலையாளியின் மனைவியும் மகனும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர்.

Friday, 22 May 2009

வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் ?

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

கிழக்கு மீட்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது வடக்கும் மீட்கப்பட்டு முழு இலங்கைத் தீவும் அரசின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இதையே ஜனாதிபதி தனது பாரளுமன்ற வெற்றி உரையில் 'அதி உயர் பாரளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்களை நாடு முழுவதும் இப்போது அமுல்படுத்த முடியும்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

Saturday, 18 April 2009

Mobile Operating Systems


We had a discussion on mobile phone operating systems recently on Bro. Murshid Ahmad's facebook page after his post about his N series phone.


Mobiles, improved way back in past years. Nokia is using the phrase 'Multimedia Computers' when introducing its new N series phones, with Symbian OS. Apple on the other hand successfully implemented Mac OS x into its iPhones. Earlier last year Google came up with Android - an open source mobile operating system, installed on a HTC handset launched in the UK by T-Mobile. Actually our discussion was on which is the best mobile operating system.


Saturday, 9 August 2008

பொன்னி வண்டு வளர்த்தலும் இன்ன பிற சிறுவர் விளையாட்டுகளும்

இரண்டு தினங்களுக்கு முன் சார்ஜாவில் காத்தான்குடியைச் சேர்ந்த இரு சகோதரர்களைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது எதேச்சையாக பொன்னி வண்டு பற்றிய பேச்சு வந்தது.

முன்பு கோடை காலங்களில் பொன்னி வண்டுகள் தென்பட ஆரம்பிக்கும். ஆநேக சிறுவர்கள் அவற்றை வாங்கி வளுர்க்கத் தொடங்குவர். பொன்னி வண்டின் தோற்றம் தெளிவான பால் வெறுபாட்டைக் காட்டும். ராசா வண்டு என அறியப்படும் ஆண் வண்டு தலை மற்றும் வெளிச் சிறகுகளில் அழகான பளபளப்பான பச்சை நிறம் சார்ந்த வடிவங்களைக் கொண்டிருக்கும். களுதை வண்டு என அறியப்படும் பெண் வண்டு தலையில் இவ்வகை வடிவத்தையும் சிவப்பு சார்ந்த ஒரு வர்ண வெளிச் சிறகுகளைக் கொண்டிருக்கும். வாகை இலைகளைச் சாப்பிடும். சிறுவர்களோ இவற்றை வளர்ப்பதுடன், வாகை இலைகளை உணவாக ஊட்டுதல், மண்ணினுள் புதைத்து முட்டை இடச் செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதிகம் முட்டையிடும் வண்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் உண்டு.

இதில் வலையோலை எழுதும் அளவிற்கு என்ன உண்டு என்று யோசிக்கிறீர்களா? நிறைய உண்டு. அதாவது இதைப் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் உறைத்தது கடைசியாகப் பொன்னி வண்டுகளை கண்டு ஏறத்தாள 15 வருடங்கள் போய் விட்டன என்பது.

இது போன்று இல்லாமல் போய் விட்ட ஏனைய விளையாட்டுகள் பற்றிப் பேசினோம். கிட்டிப்புள், குண்டு விளையாடுதல், சில்லுக்கட்டை, பேப்பந்து, மாத்தான் என ஒரு பட்டியல் நீண்டது. அத்துடன் கோடைகாலங்களில் காற்று அதிகம் வீசும் சில மாதங்களில் கடற்கரை மற்றும் மையவாடி போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான பட்டங்கள் ஏற்றப்படுவதை நண்பர் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

அஸ்ஹர் நானா கட்டித் தந்த சிவப்பும் பச்சையுமான வர்ணங்கள் கொண்ட பொட்டிப் பட்டம் ஒன்றை நானும் ஏற்றியிருக்கிறேன், மெத்தைப்பள்ளி மையவாடியில்.

அனைத்து இவ்வாறான சிறுவர் விளையாட்டுகளும் அருகியோ நின்றோ போய்விட்டன. சனத்தெகை மிகவும் அதிகரித்து விட்டதால் விறுவர்கள் வீதியில் விளையாட்டுக்களில் ஈடுபடல் ஆபத்தாகி விட்டமையும், வளவினுள் விளையாடும் அளவுக்கு இட வசதி இல்லாமல் போய் விட்டமையும் காரணங்களாக இருக்க முடியும்.

சிறுவர்கள் என்ன விளையாடுகின்றனர் என்று பார்த்தீர்களேயானால், குறித்த சிலர் மைதானங்களுக்குச் சென்று கிரிக்கெட் ஆடுகின்றனர். சற்று வளர்ந்து விட்டால் அதிகம் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனர்.

கணினி விளையாடடுகளில் நன்மைகளிலும் பார்க்க தீமை அதிகம் என்பதுடன், விளையாட்டுகளின் ஆதாரமான உடலுக்கு வழங்கப்படும் வேலை அறவே இல்லத்துப் போய் விடுகிறது. அதே கதிரையில் இருந்தபடி விளையாடி என்ன பயன். ஜப்பானில் அதிக கணினி விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டிருப்பதில் எமக்கு சிறந்த முன்னுதாரணம் இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு முக்கியம் என்ற அடிப்படையில், பழையதோ புதிதோ - ஏதாவது சிறுவர் விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

அத்துடன் மார்க்க அடிப்படையிலும் அவசியமான நீச்சல் மற்றும் தற்காப்பு சார்ந்த கலைகளில் சிறு வயது முதல் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்படுதல் சிறந்த பலனை அளிக்கும்.

Monday, 4 August 2008

சுஹதாக்கள் ஞாபகார்த்தம் பதினெட்டாவது வருடத்தில்

எனக்குப் பளிச்சென ஞாபகமிருக்கும் விடயங்களில் அந்த ஆகஸ்ட் 3 இரவு முக்கியமானது. மெத்தைப்பள்ளியில் இஷhவின் இறுதி அத்தஹிய்யாத்தில் அமர்ந்த போது ஒரு குண்டு வெடிப்பும் தொடர்ந்து கற்றையாயக் கால் மணி நேரம் கேட்ட வெடிச் சத்தங்களும். இன்றும் காதில் ஒலிக்கும்.


வழமையான சத்தங்கள் என்றேதான் எண்ணினேன். தொண்ணூறு வீதத்துக்கும் மெல் நிறைந்திருந்த மெததைப்பள்ளியின் கீழ்மாடியிலிருந்த அனைவரும் அவசரமாய் வெளியேறினர்.



இருட்டான வீதியால் அருகிலுள்ள வீடு போய்ச் சேர்கிறேன். சில நிமிடங்களில் செய்தி வந்து சேர்கிறது. மீண்டும் மீண்டும் அதை எழுதி என்ன பயன்?


எனது வகுப்புத் தோழன் சமதும் கொல்லப்பட்டான். உருவத்தில் எனக்கு சற்றும் சளைக்காமல், எத்தனை தொல்லை பண்ணினாலும் சகித்துக் கொண்டு சிரிப்பான். சில மாதங்கள் எனது பக்கத்துக் கதிரையில் அமர்ந்திருந்தான். 14 வயதில் முதல் ஜமாத் தொழுகைக்குச் சென்றிருக்கிறான்.

நூர்தீன் சாச்சாவும் கொல்லப்பட்டார். எனது உம்மாவின் மாமாவான அப்பாஸ் ஆலிம் இன் மகன் ஹுசைனியாத் தைக்காவின் முன்னால் வீடு. எனது முழுக் குடும்பத்திலும் அன்றைய திகதிக்கு ஒரே பட்டதாரி. யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். ஒரு ஆசிரியராகப் பணியாற்றியதால், சிறுவனான என்னிடம் அடிக்கடி படிப்பின் அவசியம் பற்றிப் பேசுவார்.



தொழில் நிமித்தம் வெளியூரில் நின்ற ஆலிமு மாமா (அப்பாஸ் ஆலிம்) ஏழு நாட்களின் பின்புதான் வந்து சேர்ந்தார். மையதத்துப் புட்டிக்குப் போகலாம் வாடா மன என்று அழைத்தார். அவருடன் சென்றேன். ஒரே வரிசையில் நீண்டு கிடந்த 103 கப்றுகளையும் காட்டினேன். சற்று நேரம் ஒதியவர் உடைந்து அழுதார். எனது குடும்பத்தில் ஒரு ஆலமரம் போன்றிருந்த, அனைத்துப் பிரச்சினைகளையும் விரைவாகச் சமாளித்த ஆலிமு மாமா அழுவதை முதன்முறை பார்த்தேன்.


பதினெட்டு வருட நிறைவில் நினைவில் நிற்கிறோம். நிலைமைகளில் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா? நான் இல்லையென்பேன். சிவப்பு இதழில் இவர்களையும் சேர்த்துக் கொள்வோம் எனும் தலைப்பில் எப்போதும் என்னிடம் கலகலப்பாகப் பேசும் அப்றா மன்சூர் உட்பட 4 அணிமைய சுஹதாக்களைப் பார்க்க முடிந்தது.


இன்னொரு கட்டுரைப் பிரித்தெடுப்பில் கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் கூட்டாட்சி இவ்வாறான தாக்குதல்களை ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாகப் பசப்பியது.
எனக்கு நம்பிக்கை அறவே இல்லை.



ஒரு விடயத்தைச் சொல்லுவேன். இஸ்ரேலியப் படைகள் கூட இன்னும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டதில்லை.
உலகில் முஸ்லிம்களின் மோசமான எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இஸ்ரேலியர்களிலும் கேவலமான கொடூரமான கூட்டம் ஒன்றை நாம் எதிர்கொள்கிறோம்.


அதன் பெயர்கள், கோலங்கள் என எது மாறினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வேலைத்திட்டங்கள் எப்போதும் மாறியதில்லை மாறப்போவதுமில்லை.


சகோதரர் பொறியியலாளர் அப்துல் றஹ்மான் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் பணியாற்றும் போது ஒரு வெளிநாட்டவர் கூறியதை அடிக்கடி கூறுவார். அதாவது: முஸ்லிம்கள் இப்போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தும் இது சம்பந்தமான தீர்வு போன்ற விடயங்களில் அதி குறைந்த ஆர்வமுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். இந்நிலை இன்றுவரை மாற்றம் எதனையும் காணவில்லை.

எதை எழுதுவதென்று தெரியாமல் இப்பத்தி அலைபாய்வது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். என்னால் முடியவில்லை. மீண்டும் மீண்டும் என் சமூகத்தின் முகத்தில் குத்தாணிகளால் இழைக்கப்படும் அநியாய வடுக்களைப் பார்த்து அழும் என் கையறு நிலையைப் பார்த்து சுயவெறுப்பும் விரக்தியும் மிஞ்சுகின்றன.

எங்கள் குடும்பத்துக்கு படுவான்கரையில் வயல் உன்றிருந்தது. கொட்டாண்ட பங்கு என அழைக்கப்படும் பிரந்தியத்தில் அது இருந்ததாக அறிந்திருந்தேன். எனது வாழ்நாளில் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் குடும்பத்தின் கஷ;ட நிலையால் அதை விற்றுத் தின்றும் ஆகி விட்டது. எனது வாப்பா கூட ஓரிரு தடவைகள்தான் அங்கு சென்றதாகக் கூறினர். எனது மகள் யுஸ்ரி படுவான்கரையைப் போய்ப் பார்க்க முடியும் என்று உங்களில் எவருக்காவது சொல்ல முடியுமா? எனக்குத் தெரியவில்லை.

அசரீரி ஒரு கவிதையில் சொல்லியிருந்தார்:

இனி வேறென்ன..இருப்பும் உரிமையும் கோசமும் பணியாரமும்
அவர்களைநீளமாய்த் தோண்டச் சொல்லுங்கள்நம்மெல்லாருக்குமான மொத்தமான கபுறொன்றை
கிழக்கின் ஆறையும் கடலையும் தொங்கலாகக் கொண்ட நீளத்தில்

உண்மையாய்ப் போய் விடுமோ என்ற பயம் இருக்கிறது.




Saturday, 28 June 2008

கற்றது - கை மண் அளவு

சற்றே நீண்ட இடைவெளியின் பின் உங்களுடன் சொல்லாடுவதில் மகிழ்ச்சி.


யாரையும் போலவே, நானும் எனது கை மண் அளவுக் கல்விக்காய் இன்னும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.


எனது கல்விப் பாதையின் மைல் கற்களை உங்களுக்காய் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை வகுப்புகளில் முதல் 10 இடங்களுக்குள் எனது தரம் அலைந்திருந்தது. பத்துக்கு மேல் வந்ததாய் நினைவில்லை.


பாடசாலைகள்:

காத்தான்குடி - மெத்தைப் பள்ளி வித்தியாலயம் (தரம் 1 - 3)

காத்தான்குடி - மீரா பாலிகா மகா வித்தியாலயம் (தரம் 4 - 5)

காத்தான்குடி - மத்திய மகா வித்தியாலயம் (தரம் 6 - 9)

சம்மாந்துறை - முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தரம் 9 - சா. த. பரீட்சை)

கல்முனை - சாஹிறாக் கல்லூரி (க.பொ.த. உயர்தரம்)


தொடர்ந்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவாகி பின்னர் காத்திருப்புப் பட்டியலில் விவசாய பீடத்தில் இடம் கிடைத்தது. மருத்துவ பீடக் கனவுகளை ஊரிலேயே புதைத்து விட்டு நண்பர் அதீக் சம்சுதீனும் நானும் தினமும் காத்தான்குடி - கொழும்பு நகர்சேர் பேரூந்தைப் பிடித்து வகுப்புகளுக்குப் போய்ச் சேர்வோம்.


வேலைக்கும் போய்க் கொண்டிருந்த படியால் வகுப்புகள் அடிபடுவதும், வீட்டுக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் ஓடி வகுப்புகளை இறுதி நிமிடங்களில் பிடிப்பதும் வாடிக்கையாகிப் போனது.


ஒருவாறாக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் பட்டப்படிப்பு முடிந்து விட்டது. மேலும் சூழலின் போட்டி மிகுல்த தன்மையால் மேலும் படிக்க வேண்டும் என்ற சிந்தனை மிகைத்திருந்தது. விவசாயப் பட்டதாரிகட்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்பட்டதால், வழமையாக ஈடுபாடு கூடிய மற்றொரு துறையான கணினித் துறையின்பால் நகர்தல் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றியது.


இச்சமயத்தில்தான் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டப் பின் கற்கைகள் நிறுவகத்தால், கணினி விஞ்ஞான முதுமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இறவனின் ஊதவியால் அதில் அனுமதியும் கிடைத்தது. ஏறத்தாழ இரு வருடங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்குப் பயணித்து பாடநெறியின் வகுப்புகள், பரீட்சைகள் பூர்த்தியடைந்தன. எனினும் புதிய துறையாகையால் ஆய்வு இன்னும் இரு வருடங்களை விழுங்கியது. ஒருவாறாக இவ்வருடம் மார்ச் மாதம்தான் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடிந்தது.


இப்பயணங்களிலும் படிப்பிலும் நண்பர்களான மன்சூர் காசிம் மற்றும் றாபி அப்துல் கரீம் (மருதமுனை) ஆகியோர் பெரிதும் இணைந்தேயிருந்தனர். நண்பர் றிசாத், இறக்காமத்திலிருந்து பயணித்த படியால் கண்டியில் இணைந்து கொள்வார்.


தற்போது தொழில் நிமித்தம் தேவையிருப்பதால், சிஸ்கோ நிறுவனத்தின் கணினி வலையமைப்புச் சான்றிதழான CCNA பரீட்சைக்கான ஆயத்தங்களை கடந்த வாரம் முதல் ஆரம்பித்திருக்கின்றேன்.


ஏதாவது ஒரு துறையில் கலாநிதி வரை செல்ல வேண்டும் என்பதும், பல்கலைக் கழகம் ஒன்றில் பணியாற்ற வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசை. அமைப்பிருந்தால் பார்க்கலாம்.

நினைவில் நிலைத்திருக்கும் ஆசிரியர்கள்:


முஸலிம் பாலர் பாடசாலை ஆசிரியையான லத்தீபா டீச்சர்

ஆரம்ப வகுப்புகளில் வகுப்பாசிரியையான ஜெஸீமா முகைதீன் டீச்சர்

தரம் 6 கணித ஆசிரியரான நவரத்தினராஜா (நவம்) சேர் ஆரைப்பற்றையைச் சேர்ந்தவர்

ஆரம்ப ஆங்கில ஆசிரியரான லியோன் சேர் (மட்டக்களப்பு)

தரம் 5 தெடக்கம் 9 ஆங்கில ஆசிரியையான மர்ழியா முனீர் டீச்சர்

தரம் 7, 8 தமிழாசிரியரான ஹமீத் சேர்

தரம் 7, 8 ஆங்கில ஆசிரியரான அமீரலி சேர்

தரம் 7, 8 கணித ஆசிரியர்களான பாரி சேர் மற்றும் எம். சீ. எம். முஸ்தபா சேர்

தரம் 7, 8 விஞ்ஞான ஆசிரியரான நசார் சேர்

தரம் 9 தமிழசிரையான நபீசா டீச்சர் (சம்மாந்துறை)

தரம் 9, 10 ஆங்கில ஆசிரியையான ரெனூபா இஸ்மாயில் டீச்சர் (சம்மாந்துறை)

தரம் 9, 10 கணித ஆசிரியர்களான மஜீத் சேர் (சம்மாந்துறை) மற்றும் ஜௌபர் சேர் (சம்மாந்துறை)

தரம் 9, 10 விஞ்ஞான ஆசிரயரான சிறாஜ்தீன் சேர் (சம்மாந்துறை)


உயர்தர விலங்கியல் ஆசிரியரான கே. எம். மன்சூர் சேர் (அக்கரைப்பற்று), ஈஸ்வரி (ஈச்சா) டீச்சர் (மட்டக்களப்பு)

உயர்தர தாவரவியல் ஆசிரயர்களான உவைஸ் சேர் (மருதமுனை), அஸ்ஹர் சேர் (கல்முனை), அன்புதீன் சேர் (கல்முனை), குணம் சேர் (மட்டக்களப்பு)

உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களான அன்சார் சேர், இஸ்மாயில் சேர் (கல்முனை), கோவிந்தராஜா சேர் (மட்டக்களப்பு)

உயர்தர இரசாயனவியல் ஆசிரியர்களான சீ. எம். எம. மன்சூர் சேர், முபாறக் சேர் (நிந்தவூர்), பசீல் சேர் (கல்முனை), சனூஸ் காரியப்பர் சேர் (கல்முனை), றிஸ்வான் சேர் (கல்முனை), சாபி ஜமால்தீன் சேர் (அக்கரைப்பற்று)


விரிவுரையாளர்கள் - கிழக்குப் பல்கலைக்கழகம்


விவசாய இரசாயன சிரேஷட விரிவுரையாளரும், எனது ஆய்வு மேற்பார்வையாளருமான கலாநிதி. தேவகி மகேந்திரன் அவர்கள் (யாழ்ப்பாணம்)


விவசாய இரசாயன சிரேஷட விரிவுரையாளரும், ஆய்வுக்கான கற்கைகளில் முக்கிய பங்கு கொண்டதோடு பல நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கியவருமான தற்போதைய

விவசாய பீடாதிபதி கலாநிதி. பிரேமகுமார் அவர்கள் (நாவற்குடா)


முன்னாள் விவசாய பீடாதிபதியும் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்தபோது கடத்தப்பட்டு காணாமல் போன எப்போதும் மாணவர் நலனை முன்னிறுத்தி சேவையாற்றியதோடு நட்புறவோடு பழகியவருமான பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்கள் (யாழ்ப்பாணம்)


பயிர்த் தாவரவியல் விரிவுரையாளரும் முதல் வருடத்தின் போது எனது கல்வியில் பல வகையான பெரும் உதவிகளைப் புரிந்தவருமான தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிசாகரன் அவர்கள் (களுவாஞ்சிகுடி)


மேலும் எனது மதிப்புக்குரிய விரிவுரையாளர்களாகிய பின்வருவோர்:

தாவர உடற்றொழிலியல் விரிவுரையாளர் மகேந்திரன் அவர்கள்

விவசாய எந்திரவியல் விரிவுரையாளர் கலாநிதி திருச்செல்வம் அவர்கள்

பயிர் விஞ்ஞான விரிவுரையாளர் குமாரகுணரத்தினம் அவர்கள்

உயிர்த் தொழிநுட்பவியல் விரிவுரையாளர் சுரேஸ் சுந்தர் அவர்கள்

இவ்வலையோலையின் பாகம் 2 விரைவில் வரும் .......


Saturday, 31 May 2008

வாப்பா





வாப்பா
பற்றி நிறைய எழுத முடியும். நேரம் இன்னைய பிற விடயங்களை பயந்து சில விடயங்களை மட்டும் எழுதுகிறேன்.

வாப்பா மிகவும் அன்பானவர். எங்களிடம் அவர் அதிர்ந்து பேசியதே மிகவும் அரிதானது. எனது வளர்ச்சியின் கட்டங்களில் காலப்போக்கில் நண்பன் போலவே மாறிப் போனார். இதனாலேயோ என்னவோ கெட்ட விடயங்களின் பால் போக மனம் இடந்தரவேயில்லை. 

அனைவரிடமும் ஆதரவாகவும் ஆனந்தமாகவும் பேசுவார். முடிந்தளவு உதவி செய்வார். ஜனாசாத் தொழுகைக்கு மெத்தைப்பளியின் கீழ்த்தளம் நிறைந்து போனதையும், ஆயிரக் கணக்கான சகோதர இனத்தவர்கள் வீட்டுக்கும் பள்ளிக்கு வெளியிலுமாய் வந்ததை பார்த்த போதுதான் அவரது தொடர்புகளின் வீச்சு எனக்கே விளங்கியது. மூன்று மாதங்களின் முன்னர் வீட்டுக்கு வந்து பேசிக்கொணடிருந்த முந்நாள் அதிபரும் எங்கள் குடும்ப நண்பருமான ஏ. யூ. மாஸ்டர் என அறியப்படும் ஏ. யூ. எம். இஸ்மாயில் சேரும் இதைச் சிலாகித்துப் பேசினார்.

ஆங்கிலத்தில் எழுதுதல், கணினி, ஐந்தொகை மற்றும் பல விடயங்களை கற்பிப்பதில் உறுதியாய் இருந்தார். நீ முயற்சித்துக் கற்ற விடயங்கள் பலனில்லாமல் போகாது என்று அவர் உட்பட ஊரிலுள்ள உதாரணங்களை எடுத்து விளக்குவார். நான் 31 வயதுவரை முயற்சித்து முதுமாணி வரை கற்பதற்கான ஊக்கத்தில் பெரும் பங்கு அவருக்கேயுரியது.

வேர்க்சொப் என்றே அறியப்பட்ட மஞ்சந்தொடுவாய் இணைந்த தொழிநுட்ப அலகை ஜனாதிபதி பிரேமதாசவின் நடமாடும் சேவையின் போது அந்நாள் உயர்கல்வி அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீத் அவர்களினதும் பின்னர் அப்போதய தபால் தொலைத்தொடர்புகள் பிரதியமைச்சரான ஹிஸ்புல்லாவினதும் உதவிகளுடன் முழுதான தொழிநுட்பக் கல்லூரியாய் மாற்றி அதன் முன்னேற்றத்துக்காய் பெரிதும் உழைத்தார். 18.05.1998 அன்று 49 வயதில் மரணிக்கும் போது அதன் அதிபராய் இருந்தார்.

எமதூரை விட சகோதர சமூகத்திடம் இதற்கான மதிப்பு அதிகம் இருந்ததை நான் பலமுறை உணரக்கூடியதாய் இருந்தது. 

ஆனால் காத்தான்குடியின் வரலாறு என்று அச்சில் வெளிவந்த நூலில் கல்விக்குப் பங்களிப்புச் செய்தோர் வரிசையில் அவரது பெயரோ மேற்சொன்ன விடயமோ காணப்படவில்லை. அரசியல் காரணங்கள் இருந்திருக்கலாம். அத்துடன் 20.05.1998 அன்று தொழிநுட்பக் கல்லூரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அழுதழுது பேசிய அநேகர் புதிதாய்க் கட்டப்படவுள்ள பார்த்திருப்பு மண்டபக் கட்டடத்துக்கு அவரது பெயரை வைக்கவுள்ளதாய்ச் சொன்னார்கள். அன்றே எனக்குத் தெரியும் - அது நடக்காதென்று. மஹ்ரூப் கரீம் சேர் இன்றும் இது தொடர்பில் ஆத்திரப்பட்டுப் பேசுவார். 

வாப்பவிடம் நிறைய சமூக நலன் சார்ந்த திட்டங்கள் இருந்தன. இரவு நேர வைத்திய சேவைக்காக இரு வருடங்களுக்கும் மேலாக ஹெல்த் சிட்டி என்று மததிய வீதியில் ஒரு தனியார் வைத்திய நிலையத்தை நடத்தினார். சம்பந்தமில்லாமல் வேறொரு பிரச்சினையில் அவரை இழுத்து பணத்தாசை பிடித்து - தமிழ் வைத்தியர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுத்துத் தொழில் செய்வதாக ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்கள். இத்தனைக்கும் அங்கு இரவு நேரங்களில் மருந்து வழங்குவதற்காக சாக்கிர் தம்பி - றியாஸ் தம்பி - அல்லது நான் மட்டும்தான் தங்குவோம். அவர் மரணித்த பின்னர் பங்காளராக இருந்தவர் முப்பதாயிரம் அளவிலும் வாடகைக்கு வீடு வழங்கியோர் ஆறாயிரம் அளவிலும் அடித்துக் கொண்டு போனது தனிக்கதை. அநாதைகளின் சொத்தைத் தின்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம் போலும். 

வறுமைப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் புலமைப்பரிசில் நிதியம் ஒன்று நடத்த வேண்டும் என்பது அவரது நிறைவேறாத ஆசை. அவ்வளவு பண வசதியை அவருக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை. அவரது பெயரில் இவ்வாறான முயற்சியொன்று செய்ய எனக்கும் ஆசைதான். முடிகிறதா பார்க்கலாம்.

அவர் மரணித்து தசாப்தம் ஒன்று கடந்த போதிலும் அவரை நான் யோசிக்காத நாள் கிடையாது. அவ்வளவு அடிகள் பட்டாயிற்று. அவரைப்போலவே என்னையும் தேவைகளுக்காக வேலை வாங்கி - வசதியாய்ப் பயன்படுத்தியோர் பலர். பின்னர் அதற்குப் பிரதி உபகாரம் செய்யாவிட்டாலும் (பிரதியுபகார எதிர்பார்ப்பு எனது பரம்பரையிலேயே இல்லாத ஒன்று) புரூட்டஸ் போல முதுகில் குத்தித் தூக்கி வீசி விடுவர். 

துரோகக் குத்துகளின் வலியோடும் கூடவேயிருந்த துரோகிகளை அறியாமலும் வாப்பா மௌத்தாய்ப் போனார். அதே குத்துகளின் தாங்க முடியாத வலிகளோடும் காயங்களோடும் நான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை கத்திகள் வருமோ பார்க்கலாம்.

இன்னும் வரும்..........